1) அயோத்தி நிலத் தகராறு குறித்த வழக்கில் எப்போது தீர்ப்பு வெளியாகும்?
அயோத்தி நிலத் தகராறு குறித்த வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்குத் தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் 2019 நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறவுள்ளதால், 2019 நவம்பர் 4 முதல் 15 வரையிலான தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி கோகோய் 65 வயதை பூர்த்தி செய்வதால், அவர் ஓய்வு பெறுகிறார். விதிமுறைகளின்படி, உச்சநீதிமன்ற நீதிபதி 65 வயது பூர்த்தியாகும் போது ஓய்வு பெற்றுவிடுவார்.
நவம்பர் 17ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தவறிவிட்டால், புதிதாக அமைக்கப்படும் அமர்வு இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும். அது சீக்கிரம் நடக்க வாய்ப்பிருக்காது.
``தலைமை நீதிபதி நவம்பர் 17ல் ஓய்வு பெறுகிறார். அது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், முந்தைய நாள் சனிக்கிழமை உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதாலும், 2019 நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அயோத்தி நிலத் தகராறு குறித்த வழக்கில் நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியகும் என நாம் எதிர்பார்க்கலாம்'' என்று முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.சி. கவுசிக் பிபிசியிடம் தெரிவித்தார்.
2) அயோத்தி நிலத் தகராறு என்பது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில், அயோத்தி நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதி நிலத்தை மையமாகக் கொண்டது அயோத்தி நிலத் தகராறு வழக்கு.
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் - இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?
- பாபர் மசூதியை இடிக்காமல் நரசிம்ம ராவால் காப்பாற்றியிருக்க முடியுமா?
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் 2010 செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லா அமைப்புக்கும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுபோன்ற உணர்வுபூர்வமான விஷயத்தில் முடிவு எடுப்பதில் உள்ள சிரமம் பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ``தேவதைகளும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய அளவுக்கு சிறிய நிலம் தொடர்பான பிரச்சினை இது. எண்ணற்ற கண்ணிவெடிகளை போன்ற சிக்கல் நிறைந்தது. அவற்றை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது'' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டைதான் தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
3) தீர்ப்பு வெளியாகும் நாளில் என்ன நடக்கும்?
இந்த நிலம் யாருக்குச் சொந்தமானது, எந்தத் தரப்பாருக்கு எந்தப் பகுதி சொந்தமானது என்பது பற்றி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி தீர்ப்பு அளிக்கும். அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அது உறுதிப்படுத்தலாம். அனைத்து தரப்பினருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும் என்று அது கருதக் கூடிய வகையில் நிலத்தைப் பிரிக்கவும் செய்யலாம்.
ஐந்து நீதிபதிகளும் விசாரணை அரங்கிற்கு அன்றைய தினம் வந்து, தங்கள் தீர்ப்புகளை ஒவ்வொருவராக வாசிப்பார்கள். அநேகமாக, இதை தலைமை நீதிபதியே முன்னெடுத்து செய்யக்கூடும்.
``நீதிமன்றத்தில் அன்றைக்கு மிகுந்த கூட்டமாக இருக்கும். 1வது விசாரணை ஹாலுக்கு ஐந்து நீதிபதிகளும் வருவார்கள். தங்கள் தரப்பிற்கான தீர்ப்பை அவர்கள் படிப்பார்கள். அதன் பிறகு தங்களுடைய அறைகளுக்கு அவர்கள் செல்வார்கள். பிறகு எல்லாமே வரலாறாகிவிடும்'' என்று கவுசிக் பிபிசியிடம் கூறினார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2010 செப்டம்பர் தீர்ப்பில் மூன்று கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், அந்தக் கட்டடம் இஸ்லாமிய கோட்பாடுகளின்படி இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடியும் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் அங்கு மீண்டும் மசூதி கட்டப்பட வேண்டும் என்று அப்போதும் இஸ்லாமியர்கள் கோரினர்.
2010 தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் மேல்முறையீடு செய்ததை அடுத்து 2011ல் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

4) இந்தத் தீர்ப்பை முடிவு செய்யப் போகும் நீதிபதிகள் யார்?
தீர்ப்பு அளிக்கப் போகும் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைவராக இருப்பார். அதில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ள ஒரே இஸ்லாமியராக நீதிபதி நஸீர் உள்ளார்.
``ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் இருந்து, இந்த வழக்கை தினமும் நீதிபதிகள் விசாரித்து வருவதால் தீர்ப்பையும் இவர்கள் அளிப்பது தான் உகந்ததாக இருக்கும்'' என்று சர்வதேசப் புகழ் பெற்ற வழக்கறிஞரான டாக்டர் சூரத் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
5) ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி குறித்த வரலாறு என்ன?
அயோத்தி பாபர் மசூதி குறித்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நூறாண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை இருந்து வருகிறது.
தாங்கள் வழிபடும் ராமர் பிறந்த இடம் அந்த மசூதி உள்ள இடம்தான் என்றும், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
- பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோயில்கள்
- உத்தரப்பிரதேச முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
1949 டிசம்பரில் இரவு நேரத்தில் அந்த மசூதியில் ராமர் சிலையை சிலர் கொண்டுவந்து வைக்கும் வரையில், அந்த இடத்தில் தாங்கள் வழிபாடு செய்து வந்ததாக இஸ்லாமியர் தரப்பில் கூறுகின்றனர். உடனடியாக சிலைகளுக்கு வழிபாடு தொடங்கப்பட்டது.
அடுத்த நாற்பது ஆண்டுகளில் அந்த இடத்தை நிர்வகிக்கும் உரிமை கோரியும், அங்கு வழிபாடு செய்வதற்கான உரிமை கோரியும் இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் நீதிமன்றத்தை நாடின.

1992ல் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுக்க பரவிய மதக் கலவரங்களில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த இந்து நீதிபதிகள் இருவர், இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபர் அந்த இடத்தில் கட்டிய கட்டடம், மசூதி அல்ல என்று கூறினர். ஏனெனில் அது ``இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக'' இந்துக் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டிருப்பதாகக் கூறினர்.
இருந்தபோதிலும், அமர்வில் இடம் பெற்றிருந்த இஸ்லாமிய நீதிபதி அந்தக் கருத்தை ஏற்கவில்லை. கோவில் எதுவும் இடிக்கப்படவில்லை என்றும், அஸ்திவாரத்தில் இருந்து மசூதியாகத் தான் அது கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
6) பாபர் மசூதி எப்படி இடிக்கப்பட்டது, அடுத்து என்ன நடந்தது?
1992 டிசம்பர் 6 ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) என்ற இந்து குழுவினரும், பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைவர்கள் சிலரும், அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், கர சேவகர்கள் என்று குறிப்பிடப்பட்ட 150,000 தொண்டர்களைக் கொண்ட ஒரு பேரணியை அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர். அந்தப் பேரணி வன்முறையாக மாறி, பாதுகாப்புகளை மீறிச் சென்ற கும்பல் அயோத்தி நகரில் இருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இடித்துத் தள்ளிவிட்டது.
அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் ஷர்மா, உத்தரப்பிரதேச அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு, மாநில சட்டப் பேரவையைக் கலைத்து உத்தரவிட்டார். சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தையும் 1993ல் நிர்வாக உத்தரவின் மூலம் மத்திய அரசு கையகப்படுத்தியது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக, பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன், பாஜக, வி.எச்.பி. தலைவர்கள் பலர் உள்ளிட்ட 68 பேர் இதற்குக் காரணம் என்று கூறியது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இப்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உள்ள பங்கு குறித்து பாஜக மூத்த தலைவர்கள் - லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் வேறு பலர் மீது, லக்னோவில் சிபிஐ நீதிபதி எஸ்.கே. யாதவ் விசாரணை நடத்தி வருகிறார்.
``லக்னோவில் நடைபெற்று வரும் இந்த விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2020 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்'' என்று கவுசிக் பிபிசியிடம் கூறினார்.
7) அயோத்தியில் எத்தனை கரசேவகர்கள் உயிரிழந்தனர்?
``பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 16 கரசேவகர்கள் உயிரிழந்தனர் என்று அரசின் ஆவணங்களின்படி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது'' என்று கவுசிக் பிபிசியிடம் தெரிவித்தார்.